ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' படப்பிடிப்பில் விபரீதம்.. 120 பேர் மருத்துவமனையில் அனுமதி!

லடாக்கின் லே பகுதியில் படமாக்கப்பட்டு வரும் பிரபல பாலிவுட் திரைப்படத்தில் பணியாற்றிய சுமார் 120 பேர் வாந்தி, கடுமையான தலைவலி போன்ற உடல்நல பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.

ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' படப்பிடிப்பில் விபரீதம்.. 120 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Ranveer Singh’s ‘dhurandhar’ Shoot in Ladakh Hit by Health Scare

ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்து வரும் ‘துரந்தர்’ படத்தின் படப்பிடிப்பு லடாக் பகுதியில் நடைப்பெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றி வந்த படக்குழுவினர் சுமார் 120 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட படக்குழுவினர் உடனடியாக லே பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் மருத்துவ சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் மாதம் வெளியாகும் துரந்தர்:

’உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ மற்றும் ’ஆர்டிகிள் 370’ போன்ற படங்களை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த ஆதித்யா தாருடன், ‘துரந்தர்’ படத்திற்காக கைக்கோர்த்துள்ளார் ரன்வீர் சிங். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில், ரன்வீர் சிங்குடன், சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் மற்றும் அக்ஷய் கன்னா ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பி62 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோர் இப்படத்தினை தயாரிக்க, ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தினை திரையில் வெளியிட உள்ளது.

டீசரில் இத்திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் லடாக் பகுதியில் நடைப்பெற்று வந்தது. போர் தொடர்பான காட்சிகளை படமாக்குவதால், கிட்டத்தட்ட 600 நபர்கள் அடங்கிய படக்குழு லடாக்கில் முகாமிட்டு இருந்தனர்.

120 பேர் மருத்துவமனையில் அனுமதி:

படப்பிடிப்பின் போது, படக்குழுவினருக்கு வழங்கப்பட்ட உணவினை உண்ட சுமார் 120 பேருக்கு கடுமையான நீரிழப்பு, வயிற்று வலி, வாந்தி, கடுமையான தலைவலி, இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும், எஸ்.என்.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் அளித்த உரிய சிகிச்சைக்குப் பின்னர் பலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும், 5 பேர் மட்டும் தற்போது வரை கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதையும் மருத்துவர்கள் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறுதி அறிக்கைகள் வரும் பட்சத்தில் ஒரே நேரத்தில் பலர் உடல்நலக் கோளாறினால் பாதிக்கப்பட்டதற்கான உண்மை காரணம் தெரிய வரும்.

தற்போது வரை ‘துரந்தர்’ படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow